என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஊட்டி மலர் கண்காட்சி"
- பல ஆயிரம் கொய் மலர்களை கொண்டு 10 அலங்கார வளைவுகளும், மலர் அலங்காரங்களும், பல வண்ண மலர்களால் ரங்கோலியும் அமைக்கப்பட்டுள்ளது.
- கண்காட்சி தொடங்கியதை அடுத்து தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கோடை விழா இன்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சியுடன் தொடங்கியது. மலர் கண்காட்சியை தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, வேளாண் உற்பத்தி ஆணையர் அபூர்வா ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
விழாவில் நீலகிரி கலெக்டர் அருணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்கா மலர்களை கொண்டு பொலிவுபடுத்தப்பட்டு இருந்தது. வாயிலின் நுழைவு வாயில் பல வண்ணமலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, விழாவின் சிறப்பு அம்சமாக 65 ஆயிரம் மலர் தொட்டிகளில் ஓரியண்டல் லில்லி, ஏசியா டிக் லில்லி, கேலஞ்சியோடு, இன்கா மேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, பேன்சி, டயான்தஸ், பிகோனியா, டேலியா, பால்சம், ரெனன்குலஸ் வயோலா சூரியகாந்தி, சப்னேரியா போன்ற பல்வேறு வகையான மலர்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் விழாவின் முக்கிய அம்சமாக பெங்களூரு, ஓசூரில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு பாரம்பரியமிக்க ஊட்டி மலைரெயில் உருவமும், சுட்டி குழந்தைகளை கவரும் வகையில் 20 அடி உயரத்தில் டிஸ்னி வேர்ல்டு மலர் அலங்காரமும் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர சுற்றுலா பயணிகளை கவரும் பல வண்ண மலர் தொட்டிகள் பல்வேறு அலங்காரங்களிலும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையிலும், பல வண்ண மலர்கள், அரிய வகை தாவரங்களும் வைக்கப்பட்டுள்ளது. பூங்கா முழுவதும் வண்ண விளக்குகள், தோரணங்களால் அழகுப்படுத்தப்பட்டு காட்சியளிக்கிறது.
இதுதவிர பல ஆயிரம் கொய் மலர்களை கொண்டு 10 அலங்கார வளைவுகளும், மலர் அலங்காரங்களும், பல வண்ண மலர்களால் ரங்கோலியும் அமைக்கப்பட்டுள்ளது.
பழங்கள், காய்கறிகள், வாசனை திரவியங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பல்வேறு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. விழா நடக்கும் 10 நாட்களும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.
இதேபோல் ஊட்டி ரோஜா பூங்காவில் இன்று ரோஜா கண்காட்சி தொடங்குகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், ரோஜா பூங்காவில் பல ஆயிரம் வண்ண, வண்ண ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
இதுமட்டுமின்றி குழந்தைகளை கவரக்கூடிய வகையில், பல ஆயிரம் மலர்களை கொண்டு புறா, வனவிலங்குகளை காக்க வலியுறுத்தி யானைகள், புலி, வரையாடு, காட்டுஎருமை, சிங்கம் உள்பட பல்வேறு வன விலங்குகளின் உருவங்களும் வடிவமைத்து வைக்கப்பட்டுள்ளது.
கண்காட்சி தொடங்கியதை அடுத்து தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. சுற்றுலா பயணிகள், அங்கு வைக்கப்பட்டிருந்த மலர் செடிகள், மலர் அலங்காரங்கள், மலரால் வடிவமைக்கப்பட்ட மலைரெயில், அலங்கார வளைவுகளை கண்டு ரசித்தனர்.
இதேபோல் ரோஜா பூங்காவில் வைக்கப்பட்டிருந்த யானை, சிங்கம் உள்ளிட்ட வனவிலங்குகளின் உருவங்களை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள் அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
வனவிலங்குகளின் உருவங்களை பார்த்ததும் குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். அவர்கள் அதன் அருகில் சென்று அதனை தொட்டு பார்த்தும், அதன் முன்பாக நின்று புகைப்படமும் எடுத்தனர்.
மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறையும் விடப்பட்டது. இதனால் உள்ளூர் மக்களும் கண்காட்சியை காண பூங்காவுக்கு திரண்டு வந்தனர். இதனால் தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வருகிற நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன.
- பூக்கள் மலா்ந்ததும் அந்த பூந்தொட்டிகள் காட்சித் திடலில் அடுக்கி வைக்கப்பட்டு, சுமார் ஒரு மாதம் மலர் கண்காட்சி நடத்தப்படும்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசினர் தாவரவியல் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. இதனை லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இந்த நிலையில் அங்கு தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனை தொடர்ந்து ஊட்டியில் கோடை சீசன் முடிவுக்கு வந்தது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் 2-வது சீசன் தொடங்குவது வழக்கம். அப்போது அங்கு இதமான காலநிலை நிலவும். இதனை அனுபவிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு திரண்டு வந்து செல்வர்.
எனவே ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனை தொடங்குவது என்று அரசு தோட்டக்கலை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன் ஒருபகுதியாக அங்கு மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும்விதமாக மலா் நாற்றுகள் நடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது. அப்போது மாவட்ட கலெக்டர் அம்ரித் பூங்காவில் மலர் நாற்றுகள் நட்டு, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அப்போது ஊட்டி கோட்டாட்சியா் துரைசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா், ஊட்டி நகரமன்றத் தலைவா் வாணீஸ்வரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
நீலகிரியில் 2-வது சீசன் பணிகள் தொடங்குவது குறித்து மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குநா் ஷிபிலாமேரி கூறியதாவது:-
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கொல்கத்தா, காஷ்மீா், பஞ்சாப், புனே, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து இன்கா, மேரிகோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு, ஆஸ்டா், வொ்பினா, லூபின், கேன்டிடப்ட், காஸ்மஸ், பெட்டுணியா போன்ற 60 வகை மலர் விதைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன.
அதுவும்தவிர ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிலும் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. ஒட்டுமொத்தமாக சுமார் 4 லட்சம் மலா் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் 15 ஆயிரம் மலா் தொட்டிகளில் சால்வியா, டெய்சி, டெல்பினியம், டேலியா, லில்லி, ஆலந்தூரியம் போன்ற 30 வகை மலா் செடிகளை நடவு செய்யும் பணி தொடங்கி விட்டது.
அவற்றில் பூக்கள் மலா்ந்ததும் அந்த பூந்தொட்டிகள் காட்சித் திடலில் அடுக்கி வைக்கப்பட்டு, சுமார் ஒரு மாதம் மலர் கண்காட்சி நடத்தப்படும். இது சுற்றுலா பயணிகளின் கண்கள் மட்டுமின்றி மனதுக்கும் விருந்தளிப்பதாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 5 நாட்களில் ஊட்டி மலர் கண்காட்சியை 1 லட்சத்து 22 ஆயிரத்து 708 பேர் கண்டு ரசித்துள்ளனர்.
- நிறைவு விழாவையொட்டி பரிசளிப்பு விழா நடந்தது. தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சிபிலா மேரி வரவேற்றார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி கடந்த 19-ந்தேதி தொடங்கியது. கண்காட்சியை அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல ஆயிரம் வண்ண மலர்களை கொண்டு அலங்கார உருவங்கள் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதுதவிர மலர்தொட்டிகளில் மலர்களும் பூத்து குலுங்கின.
கண்காட்சியின் சிறப்பம்சமாக 50 ஆயிரம் கார்னேஷன் மலர்களை கொண்டு 40 அடி அகலம், 48 அடி உயரத்தில் தேசிய பறவையான மயில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருந்தது.
இது பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுத்தது. மேலும் ஊட்டி 200-யை கொண்டாடும் வகையில் ஊட்டி 200 வடிவம், மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு உருவம், ஊட்டி தாவரவியல் பூங்கா உருவாகி 175-வது ஆண்டை குறிக்கும் வகையிலான உருவ வடிவம், குழந்தைகளுக்கு பிடித்த வனவிலங்குகள், பொம்மைகளின் உருவங்களும் இடம்பெற்றன.
இதுதவிர பூங்காவில் 35 ஆயிரம் மலர் தொட்டிகள் மற்றும் 125 நாடுகளின் தேசிய மலர்களும் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சியை காண நீலகிரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் கண்காட்சியை குடும்பத்துடன் பார்வையிட்டு ரசித்தனர்.
5 நாட்கள் நடந்த கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. 5 நாட்களில் ஊட்டி மலர் கண்காட்சியை 1 லட்சத்து 22 ஆயிரத்து 708 பேர் கண்டு ரசித்துள்ளனர்.
நிறைவு விழாவையொட்டி பரிசளிப்பு விழா நடந்தது. தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சிபிலா மேரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நடப்பு ஆண்டுக்கான தமிழ்நாடு தங்கசுடா் கவர்னர் சுழற்கோப்பை விருது வெலிங்டன் ராணுவ மையக் கல்லூரிக்கும், முதலமைச்சா் சுழற்கோப்பை விருது ஜென்சி கிஷோருக்கும் வழங்கப்பட்டது. ஊட்டி மலர் கண்காட்சி நிறைவு விழாவில் 36 சுழற்கோப்பைகள், 145 பேருக்கு முதல் பரிசு, 131 பேருக்கு 2-வது பரிசு, 30 பேருக்கு 3-வது பரிசு, 85 பேருக்கு சிறப்புப் பரிசுகள் உள்பட மொத்தம் 427 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ அதிகாரிகள் ஊட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மாயன் எ.மாதன், உதகை நகராட்சி துணை தலைவர் ரவிக்குமார், 4-வது வார்டு உறுப்பினர் அனிதாலட்சுமி, அரசு தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தாதேவி, மக்கள் செய்தி தொடர்பு துறை அலுவலர் சையதுமுகமது உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- கண்காட்சியை சிறப்பிக்கும் வகையில் 45 ஆயிரம் பல வண்ண கொய்மலர்களை கொண்டு மயில் மாதிரி அமைக்கப்பட்டிருந்தது.
- மலர்களால் ஆன தமிழ்நாடு மாநில சின்னங்கள், அழியும் பட்டியலில் உள்ள விலங்குகளின் உருவங்கள், இளைஞர்களை கவரும் செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டிருந்தன.
ஊட்டி:
ஊட்டியில் கோடை சீசனின் போது சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் இந்த ஆண்டுக்கான கோடைவிழா தொடங்கியது. தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டியில் ரோஜா கண்காட்சி, படகு போட்டிகள் நடைபெற்றன.
புகைப்பட கண்காட்சி, மரபு வழி நடைபயணம், குன்னூரில் தேயிலை கண்காட்சி உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகின்றன.
கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 125-வது மலர் கண்காட்சி கடந்த 19-ந்தேதி ஊட்டியில் தொடங்கியது. கண்காட்சியையொட்டி பூங்கா நுழைவு வாயிலில் பல்வேறு வண்ண மலர்களால் ஆன 10-க்கும் மேற்பட்ட அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சியை சிறப்பிக்கும் வகையில் 45 ஆயிரம் பல வண்ண கொய்மலர்களை கொண்டு மயில் மாதிரி அமைக்கப்பட்டிருந்தது.
மலர்களால் ஆன தமிழ்நாடு மாநில சின்னங்கள், அழியும் பட்டியலில் உள்ள விலங்குகளின் உருவங்கள், இளைஞர்களை கவரும் செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டிருந்தன.
அலங்கார மேடைகளில் கார்னேசன், ரோஜா மலர்கள் ஆந்தூரியம், ஆர்கிட் மலர்களும் வைக்கப்பட்டுள்ளன. 35 ஆயிரம் தொட்டிகளில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். மலர் கண்காட்சி நாளை வரை நடக்க உள்ளது. வாரவிடுமுறையான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்து அங்கு மலர்களால் உருவாக்கப்பட்டுள்ள அலங்கார வடிவங்களை கண்டு ரசித்தனர். மேலும் குடும்பத்துடன் தாவரவியல் பூங்கா புல்வெளியில் அமர்ந்து பேசியும், விளையாடியும் பொழுதை கழித்தனர்.
கண்காட்சி தொடங்கிய நாளன்று 22 ஆயிரத்து 711 பேர், 2-வது நாள் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகளும், 3-வது நாளான நேற்று 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
3 நாளில் மட்டும் 92 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்காட்சியை கண்டு ரசித்துள்ளனர். இன்றும், நாளையும் கண்காட்சி நடைபெறும். எண்ணிக்கையானது பல மடங்கும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோடைவிழா காரணமாக ஊட்டி நகரில் முக்கிய சாலைகளான அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலை, ஊட்டி-மைசூா் சாலை, ஊட்டி-கோத்தகிரி, குன்னூா் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
இதனால், வாகனங்கள் பல கிலோ மீட்டா் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாகனங்களிலேயே சிக்கிக் கொண்டதால் பல்வேறு இடங்களை பாா்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்ததாகத் தெரிவித்தனா்.
ஊட்டியில் கோடை விழா நடைபெற்று வருவதால் வெளிமாவட்டங்களைச் சோ்ந்த காவலா்கள் பாதுகாப்பு, போக்குவரத்தை சீா்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இந்த காவலா்களுக்கு சுற்றுலாத் தலங்கள் எங்கெங்கு உள்ளன. எந்த வழியில் செல்ல வேண்டும் என்ற விவரங்கள் தெரியாததால், சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய வழிகாட்டுதல் செய்ய முடியாமல் உள்ளனா். இதனால், சுற்றுலாப் பயணிகள் அவதியடைவதாகவும், கோடை விழாவுக்கு பணியமா்த்தும் காவலா்களுடன் உள்ளூா் காவலா் ஒருவா் இருந்தால் சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய முறையில் உதவுவதோடு, போக்குவரத்து நெரிசலையும் கட்டுப்படுத்த முடியும் என்று உள்ளூா் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனா்.
- ஊட்டி தாவரவியல் பூங்கா மட்டுமின்றி மற்ற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
- கொடநாடு காட்சிமுனையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
அரவேணு:
உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரிக்கு தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துகொண்டே செல்கிறது.
தற்போது நீலகிரியில் கோடை விழாவை முன்னிட்டு பல்வேறு கண்காட்சிகள் நடைபெற்றது வருகிறது. நேற்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியது. மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இன்று 2-வது நாளாக காலையிலேயே ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். அவர்கள் பூங்காவில் உள்ள மலர் செடிகளை கண்டு ரசித்து அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
மேலும் அங்கு பல வண்ண மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள மயில், யானை, கழுகு உள்ளிட்ட பல்வேறு அலங்கார சிற்பங்களையும் பார்த்து ரசித்தனர். ஊட்டி தாவரவியல் பூங்கா மட்டுமின்றி மற்ற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. படகு இல்லம், ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.
கோத்தகிரி அருகே கொடநாடு காட்சி முனை அமைந்துள்ளது. தற்போது விடுமுறை என்பதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு, கீழே இறங்கும் வழியில் உள்ள கோத்தகிரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று கொடநாடு காட்சிமுனையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள் கொடநாடு காட்சி முனையில் நிலவிய இதமான காலநிலையோடு, இங்கு அமைந்துள்ள தமிழக-கர்நாடகா ஆகிய இரு மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள மலை முகடுகளின் நடுவே உருவாகும் அடர்ந்த வெண் மேகங்களையும், ஆழமான பள்ளத்தாக்குகள், ராக் பில்லர், பச்சை பசேல் என காட்சியளிக்கும் அடர்ந்த வனப்பகுதிகளை கண்டு ரசித்தனர்.
மேலும் வனப்பகுதிக்கு நடுவே வசிக்கும் பழங்குடியினரின் தெங்குமரஹடா, கல்லம்பாளையம் உள்ளிட்ட குக்கிராமங்களையும், தமிழகத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான பவானிசாகர் அணை மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தின் குண்டல்பேட் உள்ளிட்ட பகுதிகளையும் கண்டு ரசித்தனர்.
- கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர்கண்காட்சி நாளை ஊட்டி தாவரவியல் பூங்காவில் தொடங்குகிறது.
- மலர் கண்காட்சியில் சிறப்பு அலங்காரமாக பல்லாயிரக்கணக்கான மலர்களை கொண்டு தேசிய பறவையான மயில் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் இயற்கை வளங்கள், அழகுகள் நிறைந்த பகுதியாகவும், சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ள பகுதியாகவும் காணப்படுகிறது.
இங்கு நிலவும் சிதோஷ்ண நிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.
கோடை காலத்தில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாகவும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நீலகிரி மாவட்டம் முழுவதும் கோடை விழா என்ற பெயரில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி என பல்வேறு வகையான கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோடை விழா கடந்த 6-ந்தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி நடந்தது.
கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர்கண்காட்சி நாளை (வெள்ளிக்கிழமை) ஊட்டி தாவரவியல் பூங்காவில் தொடங்குகிறது. நாளை தொடங்கி 5 நாட்கள் வரை இந்த கண்காட்சியானது நடக்கிறது.
இந்த மலர் கண்காட்சியை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
மலர் கண்காட்சியையொட்டி, சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக ஊட்டி தாவரவியல் பூங்காவின் நுழைவு வாயில் பல்வேறு வகையான மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மலர் கண்காட்சியில் சிறப்பு அலங்காரமாக பல்லாயிரக்கணக்கான மலர்களை கொண்டு தேசிய பறவையான மயில் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஊட்டி தாவரவியல் பூங்கா நிறுவப்பட்டு 175 ஆண்டுகள் மற்றும் 125-வது மலர் கண்காட்சியை குறிக்கும் வகையில் மலர்கள் மற்றும் பல வகையான பொருட்களை கொண்டு வடிவமைப்புகள் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் பல்லாயிரம் லில்லியம்ஸ் மலர்கள் மற்றும் கொய்மலர்களை கொண்டு பல்வேறு வகையான வனவிலங்குகள், குழந்தைகளை கவரும் வகையிலான கார்ட்டூன் பொம்மைகள், பல அலங்காரங்கள் என பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
மலர்களால் உருவாக்கப்படும் அலங்காரங்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் 325 ரகங்களில் 3.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
பூங்காவில் உள்ள மலர்காட்சி மாடம், கண்ணாடி மாளிகையில் 35 ஆயிரம் வண்ண மலர் தொட்டிகளில் செடிகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போது அந்த மலர்கள் அனைத்தும் பூத்து குலுங்குகிறது.
இவை அனைத்தும் தற்போது சுற்றுலா பயணிகள் பார்வைக்காக மலர் மாடத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இது நாளை கண்காட்சியை பார்க்க வரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும்.
இதுதவிர இந்த ஆண்டு மலர் கண்காட்சி அரங்கினுள் 35 ஆயிரம் பல வண்ண மலர் செடிகள் அடுக்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழாவை சிறப்பிக்கும் வகையில் காட்சி மாடங்களில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல்வேறு மலர்களின் அணிவகுப்பு, நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் கொய்மலர் அலங்காரம், அரியவகை மலர் செடிகளின் தொகுப்பு மற்றும் பல்வேறு மலர்களின் பல வகை அலங்காரங்கள், டூலிப்ஸ் மலர்கள் ஆகியவை சுற்றுலா பயணிகள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது.
ஒரு நாள் மட்டுமே இருப்பதால் மலர் கண்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. இதற்கான பணிகளில் தோட்டக்கலைத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
- 125-வது மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் வருகிற 19-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது.
- மலர்த்தொட்டிகளை மாடங்களில் அடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஊட்டி:
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்துக்கு கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. இந்த ஆண்டு கட்டுப்பாடு எதுவும் இல்லாததாலும், சமவெளி பகுதியில் வெயில் அதிகம் சுட்டெரிப்பதாலும் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தற்போது அரசு துறைகள் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 13-ந்தேதி ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
பல வண்ண மலர்களால் உருவான ஈபிள் டவர், கிரிக்கெட் மட்டை, பந்துடன் மைதானம், கால்பந்து, காலணியுடன் கூடிய மைதானம் மற்றும் மயில் உள்ளிட்ட பறவைகளின் உருவங்கள், மஞ்சள் பை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண் உருவம் என உருவங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் ரோஜாக்களும் சுற்றுலாபயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளன. 2 நாட்களில் ரோஜா கண்காட்சியை 35 ஆயிரம் பேர் ரசித்து பார்த்துள்ளனர். 3 நாட்களாக நடந்த ரோஜா கண்காட்சி இன்று மாலை நிறைவுபெறுகிறது.
இதுதவிர அரசு தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம், லேம்ஸ்ராக் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் நீலகிரி மாவட்டத்துக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 125-வது மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் வருகிற 19-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது. அங்கு மலர்த்தொட்டிகளை மாடங்களில் அடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மலர் கண்காட்சியையொட்டி இந்த வாரம் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்க அனைத்து துறை அதிகாரிகளுக்கும் கலெக்டர் அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கிடையே கூடலூரில் நடந்து வாசனை திரவியக்கண்காட்சி நேற்று நிறைவடைவதாக இருந்தது. சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக கண்காட்சி மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
- கடந்த ஆண்டு 22 லட்சம் சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.
- ஊட்டி ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி நாளை மறுநாள் (13-ந் தேதி) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
ஊட்டி:
ஊட்டியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு கோடை விழா கடந்த 6-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. டன் கணக்கில் காய்கறிகளை கொண்டு உருவாக்கப்பட்டிருந்த உருவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன.
கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வருகிற 19-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த ஆண்டு சிறப்பம்சமாக ஜெரேனியம், பால்சம், லிசியான்தஸ், சால்வியா, டெய்ஸி, சைக்லமன் மற்றும் பல புதிய ரக ஆர்னமென் டல்கேல், ஓரியண்டல்லில்லி, ஆசியாடிக்லில்லி, டேலியாக்கள் மற்றும் இன்கா மேரிகோல்டு, பிகோனியா, கேன்டீடப்ட், பிரன்ச் மேரிகோல்டு, பேன்சி, பெட்டுனியா, பிளாக்ஸ், ஜினியா, ஸ்டாக், வெர்பினா, சூரியகாந்தி, சிலோசியா, ஆன்டிரைனம், ட்யுப்ரஸ், பிகோனியா, பலவகையான கிரைசாந்திமம், ஹெலிகோனியா, ஆர்கிட், ஆந்தூரியம் போன்ற 325 வகையான மலர்கள் இடம் பெறுகின்றன. இவை 35 ஆயிரம் மலர்த் தொட்டிகளில் அடுக்கி வைக்கப்படுகின்றன. இதுதவிர பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள 5.5 லட்சம் மலர் நாற்றுகளும மலர்ந்து அழகாக காட்சி அளிக்கிறது.
மலர் காட்சி திடலில் வண்ண மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கும் பணி நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இந்த பணியை தொடங்கி வைத்தார்.
கடந்த ஆண்டு 22 லட்சம் சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர். இந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
ஊட்டி ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி நாளை மறுநாள் (13-ந் தேதி) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
இந்த பூங்காவில் 4 ஆயிரம் ரகங்களில் சுமார் 30 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தை சுற்றி பார்க்கும் வகையில் ஹெலிகாப்டர் சுற்றுலாவானது நாளை மறுநாள் தொடங்குகிறது.
கூடலூரில் விளையும் வாசனை திரவியங்களை காட்சிப்படுத்தும் விதமாக தோட்டக்கலைத்துறை சாா்பில் வாசனை திரவியக் கண்காட்சி நடத்தப்படும். இந்த கண்காட்சி நாளை முதல் 14-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
மாா்னிங் ஸ்டாா் பள்ளி மைதானத்தில் மேடை மற்றும் அரங்குகள் அமைக்கும் பணி, பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை வருவாய்த்துறையினா் செய்து வருகின்றனா்.
தொடர்ந்து நடைபெற உள்ள கண்காட்சிகள் நீலகிரியில் குவியும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
- மலைகளின் ராணியான நீலகிரிக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
- ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டு நடைபெறும் மலர்க்கண்காட்சி 125-வது மலர் கண்காட்சி ஆகும்.
ஊட்டி:
மலைகளின் ராணியான நீலகிரிக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இருந்தாலும் கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் வெயிலை சமாளிப்பதற்காகவும், குளுகுளு காலநிலையை அனுபவிப்பதற்காகவும் வழக்கத்தை விட பல மடங்கு சுற்றுலா பயணிகள் குவிவார்கள்.
அவ்வாறு குவியும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. அப்போது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கண்காட்சிகளும் நடத்தப்படும்.
இந்த ஆண்டுக்கான கோடை விழா மே மாதம் 6-ந் தேதி தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான மலர் கண்காட்சி மே 19-ந் தேதி தொடங்குகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டு நடைபெறும் மலர்க்கண்காட்சி 125-வது மலர் கண்காட்சி ஆகும். மே 23-ந் தேதி வரை 5 நாட்கள் கண்காட்சி நடக்கிறது.
மலர் கண்காட்சியை போல் காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சி உள்ளிட்டவைகளும் நடத்தப்பட உள்ளது. கோத்தகிரி நேரு பூங்காவில் மே 6, 7-ந் தேதிகளில் 12-வது காய்கறி கண்காட்சி, கூடலூரில் மே 12, 13, 14-ந் தேதிகளில் 10-வது வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி, ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் மே 13, 14, 15-ந் தேதிகளில் 18-வது ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 27, 28-ந் தேதிகளில் 63-வது பழக்கண்காட்சி நடக்கிறது.
இந்த தகவலை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்தார். மலர் கண்காட்சியில் பங்கேற்க கவர்னர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் இங்கு மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 123-வது மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பூங்காவில் பார்வையாளர்களை கவரும் வகையில் 5 லட்சம் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. மரங்கள், புல்வெளிகளை சுற்றி வித விதமாக பூந்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியினை சிறப்பிக்கும் வகையில் 89 அடி அகலம், 23 அடி உயரத்தில் 1¼ லட்சம் கார்னேசன் மலர்களால் பாராளுமன்றத்தின் தோற்றமும், 12 அடி உயரத்தில் 2 ஆயிரம் ஆர்கிட், 2 ஆயிரம் கார்னேசன் மலர்களால் மலர் அருவியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காளைகள், மயில் போன்ற அமைப்புகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூஞ்செடிகளும், மலர் மாடங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூந்தொட்டிகளும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களை வரவேற்கும் வகையில் வண்ண மலர்களால் அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சி ஏற்பாடுகள் நடைபெற்று வரும்போதே பொதுமக்கள் ஆர்வமுடன் செல்போன்களில் செல்பி எடுத்து வருகின்றனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சியினை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை (வெள்ளிக்கிழமை) ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். விழாவிற்கு வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங்பேடி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வரவேற்று பேசினார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, தேயிலை வாரிய செயல் அலுவலர் பால்ராசு, சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட மேலாண்மை இயக்குநர் அமர்குஷ்வாஹா, இயக்குநர் இண்கோ வினித், தமிழ்நாடு தேயிலை கழகமேலாண்மை இயக்குநர் ஸ்ரீநிவாஸ்ரெட்டி, முதுமலை புலிகள் காப்பக முதன்மை வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் கவுசல், மாவட்ட வன அலுவலர் குரு சுவாமி, கூடலூர் வனகோட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
முடிவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் டாக்டர் சுப்பையன் நன்றி கூறினார். இதில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மலர் கண்காட்சியினை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்த பின்னர் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.20, கேமிராவிற்கு ரூ.100, வீடியோ கேமிராவிற்கு ரூ.500 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குடும்பம், குடும்பமாக தாவரவியல் பூங்காவில் குவிந்தனர். அங்கு தோட்டக் கலைத்துறை சார்பில் செய்யப்பட்டிருந்த மலர் கண்காட்சியினை கண்டு ரசித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
பொதுமக்கள் கூட்டத்தினை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் முக்கிய இடங்களில் கேமிராவும், பொதுமக்கள் கூடும் பகுதிகளில் ஹெலி கேமிரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுலாப்பயணிகளுக்கு உதவும் வகையில் மாணவர்கள் வழிகாட்டிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தனர். மலர் கண்காட்சியினை கண்டுகளிக்க பொது மக்கள் அணிவகுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவை முன்னிட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெற்றது. இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். விழாவின் போது ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தின் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய கதக் கலை நிகழ்ச்சி தொடங்க இருந்தது.
முன்னதாக அரங்கிற்கு கவர்னரின் குடும்பத்தினர் வந்து இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர். கலை நிகழ்ச்சியை தொடங்கி வைக்க கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஊட்டி ராஜ் பவனில் இருந்து கார் மூலம் பழங்குடியினர் பண்பாட்டு மைய நுழைவு வாயில் பகுதிக்கு வந்து விட்டு காரை விட்டு இறங்காமல் மீண்டும் ராஜ் பவனுக்கு சென்று விட்டார்.
அவரது குடும்பத்தினரை அதிகாரிகள் அழைத்து சென்றனர். இது குறித்து மேடையில் இருந்த கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் துயர சம்பவம் நடந்து உள்ளதால் தென்னக பண்பாட்டு மைய தலைவராக உள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலை நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டார் என்றார்.
இதை தொடர்ந்து பண்பாட்டு மையத்துக்கு வந்திருந்தவர்கள் கலைந்து சென்றனர். முன்னதாக மலர் கண்காட்சி நிறைவு விழா முடிந்து கவர்னர் புறப்படும் போது அவரிடம் பத்திரிகையாளர்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் 10 பேர் இறந்து உள்ளனர். இது குறித்து அரசிடம் என்ன விளக்கம் கேட்டு இருக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதில் எதுவும் சொல்லாமல் காரில் ஏறி ராஜ் பவன் சென்று விட்டார். #Thoothukudifiring #TNGovernor #BanwarilalPurohit
ஊட்டியில் மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் கோடை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோடை கால சீசனையொட்டி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியும், கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சியும், ஊட்டியில் ரோஜா கண்காட்சியும் நடைபெற்று உள்ளது.
முக்கிய நிகழ்ச்சியான 122-வது மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது.
மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதனை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ரூ.1,850 கோடி மதிப்பிலான குந்தா நீரேற்று புனல் மின் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
பின்னர் ரூ. 7.49 கோடி மதிப்பில் முடிவுற்ற 7 திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.10.85 கோடியில் 5 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 1,577 பயனாளிகளுக்கு ரூ. 11.25 கோடியில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 15 ஆயிரம் மலர் தொட்டிகளும், புதுப் பூங்காவில் 25 ஆயிரம் மலர் தொட்டிகள் என 40 ஆயிரம் மலர் தொட்டிகள் கண்காட்சியில் வைக்கப்பட்டு உள்ளது.
பெங்களூர், ஓசூரில் இருந்து கொண்டு வரப்பட்ட 1 லட்சம் காரனேஷன் மலர்களால் மேட்டூர் அணை மாதிரி உருவம் அமைக்கப்பட்டு உள்ளது. 60 அடி அகலம், 20 அடி உயரத்தில் இவைஅமைக்கப்பட்டு உள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
பல்வேறு வகை பூக்களால் மலர் பந்தல் போடப்பட்டு இருந்தது. வனத்துறை, தோட்டக்கலைத்துறை, வெலிங்டன் ராணுவ கல்லூரி, ராஜ் பவன், செய்தி மக்கள் தொடர்பு துறை உள்ளிட்ட 15 துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது.
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி ஊட்டியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. வருகிற 22-ந் தேதி வரை 5 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.
கண்காட்சியை பார்வையிட வருகை தரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. #OotyFlowerShow #FlowerShow #TNCM #EdappadiPalanisamy
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்